ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய பகுதிகளில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பிளமிங்கோ, ரஷ்ய நீர் வாத்து, மஞ்சள் மூக்கு, உல்லான் குருவி, அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, கடல் நாரை, கடல் கொக்கு, கடல் காவா, நீர்க்காகங்கள் போன்ற பறவை இனங்கள் டிசம்பர் முதல் மார்ச் வரை கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்த பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் குஞ்சுகளுடன் தங்கள் தாயகங்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.
முந்தைய சில ஆண்டுகளாகப் பருவ மழைத்தவறியதால் பறவைகள் வரத்து குறைந்திருந்தது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் நடுவில் பொழிந்து மழையால் இந்தாண்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதிக்கு, இளஞ்சிவப்பு கால்கள் கொண்ட வெண்நிற கிரேட்டர் பிளமிங்கோக்கள் ஏராளமாக வந்துள்ளன. அங்கு, சுற்றித்திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்கின்றனர். இந்தப் பறவைகள் மார்ச் வரை தனுஷ்கோடி பகுதியில் தங்கியிருக்கும் என வனத் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.