ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், அவரது 113ஆவது பிறந்தநாள் விழா, 58ஆவது நினைவு தினம் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் என அனுமதி பெற்றவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பயணித்து பலர் பசும்பொன் வந்தனர்.
அவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அடிப்படையாக கொண்டு தனியாக அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து தற்பொழுது வரை கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 37 நான்கு சக்கர வாகனங்கள், 53 இருசக்கர வாகனங்கள் மற்றும் 17 கிராமங்களைச் சேர்ந்த நபர்கள் மீது 313 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், 500க்கும் மேற்பட்ட மோட்டர் சட்ட பிரிவின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 63 நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து அதன் மூலம் விதி மீறலில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் நபர்கள் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.