ராமநாதபுரம்:திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010 முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தொல் பொருட்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் அறிந்துள்ளனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், மு.ராம்குமார், வி.பிடல் காஸ்ட்ரோ, ஜீ.அஸ்வின்ராஜ், வி.பாலாஜி ஆகியோர் திருப்புல்லாணி அருகிலுள்ள பொக்கனாரேந்தலில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள வயலிலும், பள்ளபச்சேரியில் சேதுபதி அரண்மனையின் கிழக்கிலுள்ள வயலிலும் சீனநாட்டுப் பீங்கான் ஓடுகளை கண்டெடுத்து மன்றச்செயலாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுருவிடம் கொடுத்தனர்.
அவற்றை ஆய்வு செய்தபின் வே.ராஜகுரு கூறியதாவது, “ சீனநாட்டுப் பீங்கான் பாண்டங்களில் போர்சலைன், செலடன் என இருவகைகள் உள்ளன. இப்பீங்கான் ஓடுகளின் மேல் கவனமாகப் பார்த்தால் ஒரு வலைப்பின்னல் போன்ற அமைப்பு அதன் உள், வெளிப்பகுதிகளில் காணப்படும். மாணவர்கள் இரு ஊர்களிலும் கண்டெடுத்தது போர்சலைன் வகை ஓடுகள் ஆகும். வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் உருவங்கள், வடிவங்கள் வரைந்து பின் உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டு போர்சலைன் வகை பீங்கான் பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு கிடைத்தது கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகள் ஆகும். வெள்ளைப் பீங்கான் மேல் சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு, நீலம், மஞ்சள் நிறத்தில் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.
கி.பி.10-13-ம் நூற்றாண்டுகளில் சீனர்களின் முக்கிய வணிகப் பொருளாக பீங்கான் பாண்டங்கள் இருந்துள்ளன. அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து முத்து, துணி போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளனர். சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்ல வணிகத் தொடர்பு நிலவியுள்ளது. சீனாவிலிருந்து வரும் பீங்கான் பாண்டங்கள் ராமநாதபுரம் அருகிலுள்ள பெரியபட்டினம் துறைமுகத்தில் இறக்கப்பட்டு பின் அங்கிருந்து பாண்டிய நாடு முழுவதும் விற்பனைக்குச் சென்றுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சீன பீங்கான் ஓடுகள் மார்க்கோபோலோ, இபின் பதூதா ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் பெரியபட்டினத்தை பட்டன்-படன் என தமது பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். இங்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய அகழாய்வில் அதிகளவில் சீனநாட்டுப் பீங்கான் ஓடுகள் கிடைத்தன. “டௌயி சிலு” என்ற நூலில் டாபடன் என பெரியபட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன மொழியில் ‘டா’ என்றால் பெரிய எனவும், ‘படன்’ என்றால் பட்டினம் எனவும் பொருள்.
மேலும் அகழாய்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் அனைத்திலும் சீனப்பீங்கான் பாண்டங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் மொத்தக் கடற்கரையில் கால் பகுதியைக் கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டினம் முதல் கீழக்கரை வரையிலான பெரும்பாலான கடற்கரை ஊர்களிலும் உள்பகுதியிலும் சீனப் பீங்கான் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே திருப்புல்லாணி பள்ளி வளாகத்தில் இவ்வோடுகளை மாணவர்கள் கண்டெடுத்த நிலையில், திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இவை கண்டெடுக்கப்பட்டதன் மூலம் சீனப் பீங்கான் பாண்டங்கள் இப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகிறது. மாணவர்கள் கண்டெடுத்த சீனநாட்டுப் பீங்கான் ஓடுகள் ராமநாதபுரம் கேணிக்கரையிலுள்ள அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் பார்வையிடலாம்.
கீழே கிடக்கும் பளபளப்பான பீங்கான் ஓடுகளைப் பார்ப்பவர்கள் சாதாரணமாகக் கடந்து செல்லும் போது, திருப்புல்லாணி பள்ளி மாணவர்களோ அவை 900 ஆண்டுகள் பழமையான சீனநாட்டு பீங்கான் ஓடுகள் என்பதை அறிந்து ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது’’ என அவர் கூறினார்.
இதையும் படிங்க :இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்