புதுகோட்டை:மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் "என்னுடைய உச்சம், உனக்கு ஏன் அச்சம்" என விஜய் சொல்வது போன்று அவரது படத்தையும், ரஜினிகாந்த் படத்தையும் அச்சிட்டு, "என் நெஞ்சில் குடியிருக்கும், இதயதளபதி..இளைய தளபதி..தளபதி... என்ற வாசகத்துடன், மதுரை மண்ணின் மைந்தன்..விஜய் அண்ணா வெறியர்கள் என்று மதுரை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது தமிழகம் முழுவதும் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை ஜெயிலர் படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ள நிலையில் "ஒரே நாடு, ஒரே சூப்பர் ஸ்டார்..." என்றும் "உலகம் சொல்லும் தலைவர் நீ" என்றும் புதுக்கோட்டை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது, இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவும் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் கடந்த 25 ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும், ரஜினிகாந்தின் அரசியல் முடிவு குறித்த அறிவிப்பும், ரஜினிகாந்த் அவ்வப்போது பேசி வரும் அரசியல் பேச்சுக்களும், அரசியலையும் சாமானிய மனிதனின் வாழ்வையும் பிரிக்க முடியாது என்று தெளிவுபடுத்துகிறது. இதற்கு ரஜினிகாந்த் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.
திரைத்துறையில் உள்ள நட்சத்திரங்களின் உச்சம் ரஜினிகாந்த், திரைத்துறையின் ஆளுமை, வசூல், பிரம்மாண்டம் என்று சொன்னால் கூட மிகையாகாது. இப்பேற்பட்ட உச்ச நட்சத்திரத்திடமிருந்து, அரசியல் குறித்து ஏதாவது ஒரு வார்த்தை வந்து விடாதா என்று ஏங்கியவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள்.
அப்பொழுது 25 வருடத்திற்கு மேலாக ரசிகர்களிடம், "இதோ வருகிறேன்..அடுத்த வருடம் அரசியலில் குதிப்பேன்..எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது; ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்துருவேன்.." என மாறி மாறி ரசிகர்கள் மனதில் ஆசையை விதைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினியும் அரசியலும்:கடந்த 2020 ஆம் ஆண்டு முழு நேர அரசியல் பணியை தொடங்க உள்ளதாகவும் அறிவித்து, அரசியல் ஜுரத்தை மூட்டிவிட்ட ரஜினிகாந்த், அதற்கான பணிகளையும் விறுவிறுப்பாக முன்னெடுத்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை நியமனம் செய்தார். ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் ரசிகர்களிடையே அதிகமானது.
இந்நிலையில், தான் உருவாக்கிய அமைப்பை கலைக்க போவதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும், இனிமேல் என்றும் நான் அரசியலுக்குள் நுழையப் போவதில்லை என்றும் கூறி அவரை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து, தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினியின் மேடை பேச்சுகள்:அதனைத் தொடர்ந்து தான் நடித்து வரும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். அவர் நடிக்கும் படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ரஜினிகாந்த், படத்தின் பிரமோஷனுக்காக வாய்ஸ் கொடுக்கும்போது, அது அவரது ரசிகர்களிடையே அரசியல் வாய்ஸ்ஸாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நாளை திரையிடப்பட உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த விழாவில், அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ரஜினிகாந்த், பறவை வகைகளில் பருந்து மிக உயரத்தில் பறக்க கூடிய ஒரு உயிரினம் என்றும், என்னதான் காகம் பறவை இனமாக இருந்தாலும் ஒரு நிலைக்கு மேலே செல்ல முடியாது என்று ஒரு கதையை கூறினார்.
அவரவர்களது வேலையை அவரவர்கள் பார்த்தாலே உயர பறந்து, உச்சத்தை அடையலாம் என்று கூறி அங்கிருந்தவர்களிடம் பலத்த கைத்தட்டலை பெற்றார். மேலும் இது தமிழக மக்கள், அரசியல் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகியது. ஆனால் நடிகர் விஜயின் ரசிகர்கள், ரஜினிகாந்த்தை பருந்து என்றும் விஜயை காகம் எனவும் அவர்களாகவே ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க:மாவீரன் பார்த்து பாராட்டிய ரஜினி - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!