புதுக்கோட்டை:கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், காவல் துறையினரின் விசாரணையில் விரைவுத் தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதனால் இந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் 75 நாட்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 13) மலம் கலக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தொட்டியின் மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வேங்கைவயல் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் வேறு யாரேனும் உள்ளே நுழையக் கூடாது’ என்று சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை காவல் நிலையம் சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை விடுவித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதற்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்தையா மற்றும் இறையூரைச் சேர்ந்த 3 பள்ளி சிறுவர்கள் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளார். பின்னர் இது தொடர்பாக செல்வம் என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.