புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், இன்று புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அமோனியம் வாயுக்கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இது போன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இதுபோன்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை இது போன்று நடந்துள்ளது. கஜா புயலின்போது தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. தற்போது புயல், வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிப்பதற்குத் தயங்குவது ஏன்? இவ்வளவு சதவீதம் பாதிப்பு இருந்தால்தான் தேசிய பேரிடராக அறிவிக்க முடியும் என்ற எந்த சட்டமும் கிடையாது, அரசு நினைத்தால் அறிவிக்கலாம்.
தேசியப் பேரிடராக அறிவிக்கவே முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருவது வருத்தத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தர்க்கம் பண்ணுவது சரியல்ல, ஏட்டிக்குப் போட்டி என்று இல்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்குத் துணையாக இருக்க வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டில் பொன்முடி, தண்டனை பெற்ற முதல் நபர் கிடையாது. பாரபட்சம் இல்லாமல் விசாரணை செய்து, உண்மையாக ஊழல் செய்திருந்தால் தண்டிக்கலாம். ஆனால், இந்த சம்பவம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, ஊழல் செய்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.