நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். தேர்தல் முடியும் வரை வீதி வீதியாக கிராமம் கிராமமாக அனைத்துக் கட்சியினரும் வெயில் என பாராமல் அனைத்து தரப்பினரிடமும் பரப்புரை செய்தனர். பரப்புரை செய்யும் போதெல்லாம் கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துவது, உணவு அருந்துவது, அவர்களுக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு காட்சிகள் அரங்கேறின.
அரசியல்வாதிகள் மக்களிடம் நெருங்க நினைத்தாலும் மக்களிடத்தில் தேர்தலை பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இல்லாமலே காணப்பட்டது. தற்போது நீட் தேர்வு அறிவிப்பு, கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், நெடுவாசல் ஹைட்ரோகார்பன், போன்ற அனைத்து பிரச்னைகளும் தமிழ்நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நேற்று, தற்போதைய திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், தான் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக புதுக்கோட்டை மாவட்ட மக்களை சந்தித்து நன்றி சொல்வதற்காக வந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலான திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அதனையடுத்து மக்களிடம் நன்றி தெரிவித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வரும்போது தேங்காய் உடைத்து தரிசனத்தை முடித்தார். அந்த சமயம் அவரிடம் பணிபுரியும் உதவியாளரை தனது காலணியை எடுத்து வருமாறு கூறினார். உதவியாளரும் காலணியை எடுத்து வந்து அவர் அணிவதற்கு ஏதுவாக கீழே வைத்தார். இந்தச் செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
உதவியாளரை தனக்கு காலணி அணிவிக்க செய்த திருநாவுக்கரசர் வரலாற்று சரித்திரம் படைத்த தலைவர்கள் வாழ்ந்து இந்த மண்ணில் தனக்கு நிகரான ஒரு மனிதரை இப்படி ஒரு செயல் செய்ய வைத்திருப்பது மரியாதையற்ற செயலாகவே கருதப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், "பவர் இருந்தால் பசுமாடும் டவரில் ஏறி நிற்குமாம்" அந்த கதையாக இருக்கிறது இவரது செயல் எனவும் அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.