சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் வேலை பார்த்து வந்த பலருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சந்தை முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில் தமது சொந்த ஊர்களுக்கு சென்ற லாரி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் பலருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோயம்பேட்டில் இருந்து தமது ஊர்களுக்கு திரும்பியுள்ளவர்கள், காய்கனி சந்தையோடு வியாபாரத் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாள்களாக தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் செய்த பரிசோதனையில், சென்னை கோயம்பேட்டில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டம் லெட்சுமி நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, ராயவரம் அருகேயுள்ள ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்றைய சோதனையில் மேலும் இருவருக்கு கோவிட்-19 தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டையில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு சென்னையிலிருந்து புதுக்கோட்டை திரும்பியவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், அவர்கள் அனைவரையும் கண்டறிந்து, அவர்களிடமும் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்ய சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இந்த அனைத்துபகுதிகளும் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்களாக 4 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இத்துடன் மாவட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.