தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூடப்பட்டப் பள்ளி மீண்டும் திறப்பு: அரசை பின் வாங்க வைத்த கிராம மக்கள்!

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்ட 46 அரசுப் பள்ளிகளில் ஒன்றான குளத்தூர் கிராமத்து பள்ளி அக்கிராம மக்களின் தீவிர முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school

By

Published : Aug 14, 2019, 6:43 PM IST

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்படி மூடப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றையும் படிப்படியாக நூலகங்களாக மாற்றி, ஒவ்வொரு நூலகத்திற்கும் ஆயிரம் புத்தகங்களை வைத்து நூலகங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படுகிறது என அரசு அறிவித்தது.

குளத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

இந்தப் பட்டியலில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்தூர், சின்னபட்டமங்கலம் ஆகிய இரண்டு கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாட்டிலே இந்த இரு பள்ளிகள்தான் இவ்வாறு இருக்கிறதா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்ததையடுத்து அதுகுறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில், கடந்த ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு மிகவும் குறைந்து, அதாவது குளத்தூர் பள்ளியில் ஒரே ஒரு மாணவரும், சின்னபட்டமங்கலம் பள்ளியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இவ்விரு பள்ளிகளும் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கனத்த இதயத்துடன் பள்ளியை விட்டுப் பிரிந்து சென்றனர்.

இந்த நிலையில் தான் பள்ளிகள் திடீரென மூடப்பட்ட தகவல் கிராம மக்களுக்கு தெரியவர, அவர்கள் ஒன்று கூடி எப்படியாவது பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என தீர்மானம் எடுத்தனர். அதன்படி கிராமத்தினர் அனைவருமே தங்களின் குழந்தைகளை குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர். ஒரு படி மேலே சென்று, பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக, தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி வந்து விட்டனர். பள்ளியைத் திறக்க வேண்டும், மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என 11 மாணவ, மாணவிகளுடன் பள்ளியின் முன்பு காத்திருக்கிறோம் என, கல்வித் துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

கல்வித்துறை அலுவலர்கள் பள்ளிக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது

இதையறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் பள்ளிக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், ‘பள்ளியை மூட வேண்டாம், பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளில் சேர்த்தது தவறுதான். இனி அப்படி எதும் நடக்காது பள்ளியை மூடும் அளவிற்கு கொண்டு வர மாட்டோம்’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து, பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளியைத் திறந்து வைத்தார்.

மூடப்பட்டப் பள்ளி மீண்டும் திறப்பு

இது குறித்து நம்மிடம் பேசிய குளத்தூரைச் சேர்ந்த துரைராசு என்பவர், ‘ஊருக்குள் இந்தப் பள்ளியைக் கொண்டு வர ஊர் மக்கள் என்ன பாடுபட்டார்கள் என என்னுடைய பெற்றோர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது இந்தப் பள்ளியை நாம் இழந்துவிட்டால் மீண்டும் இங்கு பள்ளியைக் கொண்டு வருவது கடினமாகிவிடும். இதை உணர்ந்து தான் கல்வித்துறை அலுவலர்களை அணுகி நாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் அதே தேதியில் பள்ளியைத் தொடரச் செய்துவிட்டார்கள். மீண்டும் இந்த பள்ளிக்கு மாறுவாழ்வு அளித்த கல்வி அலுவலர்களுக்கு எங்கள் கிராமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்" என்று உணர்ச்சி ததும்ப பேசினார்.

மூடப்பட்டப் பள்ளி மீண்டும் திறப்பு: அரசை பின் வாங்க வைத்த கிராம மக்கள்!

மேலும், மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் கூறுகையில், ‘நாங்களும் பள்ளியை மூட வேண்டாம் என்பதற்காக கடும் முயற்சிகள் எடுத்தோம். எனினும் கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்ததால் வேறு வழியின்றி இப்பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ஒரே நாளில் 11 மாணவர்களைச் சேர்த்துள்ள கிராம மக்கள், சில நாட்களுக்குள் மேலும் ஐந்து மாணவர்களை சேர்த்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, உயர் அலுவலர்களிடம் இதுகுறித்து பேசியபோது, அவரும் மகிழ்ச்சியோடு பள்ளியைத் திறக்க அனுமதி அளித்தார். மேலும் மாற்றுப் பள்ளிக்குச் சென்ற இப்பள்ளியின் தலைமையாசிரியரின் ஆணையை ரத்து செய்துவிட்டு மீண்டும் இங்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம். கிராம மக்களின் கூட்டு முயற்சி வரவேற்கத்தக்கது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details