புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டம்மாள் சத்தியமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பஞ்சாயத்தில் காட்டாத்தி, பட்டுவிடுதி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான்புஞ்சை, கழியாரயன் விடுதி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவந்தன.
இங்கு சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் 750 விவசாயிகள் நெல் விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில் பட்டுவிடுதி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான்புஞ்சை, காட்டாத்தி ஆகிய நான்கு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 15 கி.மீ. தூரம் பயணம் செய்து நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் தாளடி, சம்பா என்பதற்குப் பதிலாக ரவி, கஹரிப் என்பது போன்ற விவசாயிகள் அறியாத வார்த்தைகள் அறிவிப்பாணையில் உள்ளன.
ஆகவே அவற்றைத் திருத்தம் செய்து விவசாயிகளுக்கு புரியும் வகையில் தாளடி, சம்பா எனப் புதிய அறிவிப்பை வெளியிடவும், நெல்லை கொண்டுசெல்வதற்கு ஏதுவாக மொபைல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
மேலும் விவசாயிகளின் நலன்கருதி இந்த நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "அக்டோபர் 1ஆம் தேதி வேளாண் துறை இயக்குநர் தரப்பில் 3 கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களில் உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.