சுதந்திர இந்தியாவில் ஒழிக்க முடியாத ஒன்று வறுமை. ஒரு மனிதனை இந்தச் சமூகம் ஏற்ற இறக்கத்துடன் பார்க்க கற்றுக்கொடுப்பது பணம்தான். பணம் இல்லாவிட்டால் பிணம் கூட மதிக்காது என்ற சொல், பலரது வாழ்வில் சோகக்கதையாகவே மாறியுள்ளது. ஆனால், கல்வி இருந்தால் வானத்தையும் எட்டிப் பிடிக்கலாம். அந்த வகையில், கல்வியை மட்டுமே நம்பி தனக்கான மரியாதையைப் பெற்றுள்ள மாணவியை பற்றிய இக்கட்டுரையில் காண்போம்.
புதுக்கோட்டை மாவட்டம், மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எப்சிபா. இவர் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியில் செவிலி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது தாயுடன் வசித்து வருகிறார். படிப்பில் ஆர்வம் கொண்ட எப்சிபா அருகிலுள்ள லெக்னாம்பட்டி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். கூலித்தொழில் செய்யும் தாய், வறுமை இவரை ஒரு பக்கம் விரட்டினாலும் எதற்கும் மனம் தளராமல் படித்து 12ஆம் வகுப்பில் 1050 மதிப்பெண் பெற்று எல்லோரையும் வியக்க வைத்துள்ளார், எப்சிபா.
இருக்க உருப்படியான வீடு இல்லை, உண்ண உணவும் இல்லாமல் சிரமப்பட்ட நிலையில், உயர் படிப்புக்கு பொருளாதாரம் முட்டுக்கட்டையாக இருந்துள்ளது. இருப்பினும், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலி படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் கனவிலும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று அங்கு நிகழ்ந்தது. அவர் பெற்ற மதிப்பெண்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலி படிப்பிற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தன.
பள்ளியில் படிக்கும்போதே வறுமையின் கொடுமையால், எப்சிபா சக தோழிகளின் வீடுகளில் வசித்து படித்து வந்துள்ளார். இவரது தாயார் ஆரோக்கியமேரி வீட்டு வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விடுவார். இந்தச் சூழலில் மாணவி படும் துயரச் செய்தி லெக்கனாம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஆன்டனி என்பவரின் காதுக்கு எட்டியுள்ளது. மாணவியின் நிலையைக் கேட்டு துயருற்ற தலைமையாசிரியர், மாணவி எப்சிபாவிற்கு உதவி செய்ய முடிவெடுத்தார்.
அந்த வகையில் பள்ளியில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அனைத்து ஆசிரியர்களிடமும் பணம் சேகரிக்கத் தொடங்கினார்.
இதன் மூலம் மொத்தம் 80ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இதனையடுத்து, உதவியாக கிடைத்த 80ஆயிரம் ரூபாயில் மாணவி எப்சிபாவிற்கு வெற்றிகரமாக ஒரு வீட்டினை கட்டிக் கொடுத்துள்ளனர். தலைமையாசிரியரின் முயற்சி மட்டுமல்ல, மாணவி ஒரு நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணமும் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.