தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"என்னோட உயிர் இருக்ர வரைக்கும் இந்த சேவை தொடரும்" - மொய் விருந்து வைத்து இல்லாதோருக்கு உதவும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்! - moi virundhu in pudukottai

Pudukkottai tea shop Moi virunthu: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக டீக்கடையில் மொய் விருந்து நடத்தி நிதி திரட்டிய புதுக்கோட்டை டீக்கடைக்காரரின் செயல், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மொய் விருந்து வைத்து இல்லாதோருக்கு உதவும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்
மொய் விருந்து வைத்து இல்லாதோருக்கு உதவும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 7:54 PM IST

மொய் விருந்து வைத்து இல்லாதோருக்கு உதவும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்

புதுக்கோட்டை: மொய் விருந்து நடைபெறும் மாவட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது புதுக்கோட்டை மாவட்டம். மொய் விருந்து என்பது தனிப்பட்ட நபரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வது. அதாவது ஆடி மாதத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாத சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்னவென்று பார்த்தால், அதுதான் மொய் விருந்து.

பண்டைய காலத்தில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதற்கு மாற்றாக, பண்டமாற்று முறை அதிகளவில் பயன்பாட்டிலிருந்து வந்தது. பண்டமாற்று முறை என்றால் பொருளைக் கொடுத்து பொருளைப் பெறுவதே ஆகும். இந்த வழக்கம் நாளடைவில் வளர்ச்சி அடைந்து, தற்போது மொய் விருந்து என்ற பழக்கத்திற்கு மாறியுள்ளது. பணத்தைச் செலவழித்து விதவிதமான அசைவ உணவுகளைத் தயார் செய்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதனை விருந்து அளித்து, நூறு ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை தனி ஒருவரிடம் மொய்ப் பணம் பெறும் நிகழ்ச்சி தான் மொய் விருந்து.

இதன் மூலம் வரும் மொய்ப் பணத்தைக் கொண்டு, விவசாயத்திற்கு நிலம் வாங்குவது, புதிதாக வீடு கட்டுவது தங்களது பிள்ளைகளின் உயர் கல்விக்குச் செலவிடுவது, பெண் பிள்ளைகளின் பெற்றோர், தங்களின் பெண் பிள்ளைகளின் திருமண நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வது போன்ற தனது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். இது தனிநபர் மட்டுமின்றி 10 முதல் 20 நபர்கள் வரை இணைந்து கூட்டு மொய் விருந்தாகவும் நடத்து வருகின்றனர்.

இதுபோன்ற மொய் விருந்துகளிலிருந்து, முற்றிலும் மாறுபட்டு தன்னுடைய சொந்த லாபத்திற்காக இல்லாமல் பொது நலன் கருதி மொய் விருந்து நடத்தி வருகிறார் புதுக்கோட்டையில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார். புதுக்கோட்டை மாவட்டம், மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வம்பன் நால்ரோடு பகுதியில் கடந்த 10 வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது மேட்டுப்பட்டி இந்திரா நகரில் பகவான் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் கஜா புயல் மற்றும் கரோனா காலத்தில், தான் நடத்தி வரும் டீக்கடையில் மொய் விருந்து நடத்தி, அனைவருக்கும் இலவசமாக டீ கொடுத்து, அதில் வரும் மொய்ப் பணத்தை பொது மக்களுக்கு உதவிடும் வகையில் அரசிடம் வழங்கினார். இதற்கு அடுத்தபடியாக இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்றத் தமிழக அரசு பொதுமக்களிடமிருந்து உதவி கோரியது. அப்போதும் மொய் விருந்து நடத்தி, அதில் வந்த பணத்தை அரசிடம் செலுத்தி இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இந்த நிலையில் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனது டீக்கடையில் மொய் விருந்து நடத்தினார். தனது டீக்கடைக்கு வரும் பொதுமக்கள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக டீ அருந்திவிட்டு, கடையில் வைத்திருக்கும் மொய் பாத்திரத்தில் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்குமாறு பிளக்ஸ் போர்டு வைத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து இன்று (நவ.5) பொதுமக்கள் ஏராளமானோர் டீ கடைக்கு வருகை தந்து, டீ அருந்தி விட்டு தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர். அவர்களை, தனது இல்லத்தில் நடைபெறும் வைபவத்தில் எவ்வாறு உறவினர்களை இன்முகத்துடன் கைகூப்பி வணங்கி வரவேற்கப்படுவார்களோ, அதேபோல் அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைச் சந்தனம், குங்குமம் கொடுத்து, கைகூப்பி வணங்கி அவர்களுக்கு டீ கொடுத்து உபசரித்தார்.

இதில் கிடைக்கும் நிதியைப் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்திவரும் சிவக்குமார், தனது கடைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கி வருகிறார். டீக்கடை நடத்தி வரும் சிவக்குமாருடைய செயல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்வதோடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details