தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடல் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை! - குடல் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரி ராணியார் மருத்துவமனையில் சிறுகுடல் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குடல் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை
குடல் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

By

Published : Apr 21, 2021, 10:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷியா. இவரது கணவர் சித்திக். ரஷியாவுக்கு எடுக்கப்பட்ட கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை சிறுகுடலின் முதல் பகுதி (டியோடினம் ) வளர்ச்சியின்றி சுருங்கி இருப்பதும், அதனால் பனிக்குட நீர் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி இராணியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ராணியார் மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவர் மரு. அமுதா, பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மரு. பீட்டர் ஆகியோர் கருவிலுள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம் குறித்தும், சிகிச்சைமுறைகள் குறித்தும் அப்பெண்ணிற்கு ஆலோசனை வழங்கினர்.

அதிகப்படியான பனிக்குடம் நீரினால் எந்த நேரமும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்ததால், அதிகப்படியான நீர் ஆம்னியோசென்டிசிஸ் என்ற சிறப்பு சிகிச்சை மூலம் இரண்டு முறை நீக்கப்பட்டது. இதனால், பனிக்குட நீர் இயல்புநிலைக்கு திரும்பியது. இதையடுத்து, அவருக்கு நிறைமாதத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது.

பிறந்தவுடன் குழந்தைக்கு மூச்சுத்திணறல், வாந்தி, வயிறு வீக்கம் இருந்ததையடுத்து பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது. குழந்தைக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுகுடல் சுருங்கி இருப்பதும், இரைப்பை அதிக வீக்கத்துடனும் இருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தைகள் அறுவைசிகிச்சை நிபுணர் மரு.பாலசுப்பிரமணியம் , மயக்கவியல் மருத்துவர் மரு. டேனியல் ஆகியோர் அடங்கிய மருத்துவகுழுவால் குழந்தைக்கு அறுவைசிகிச்சை மூலம் சிறுகுடலின் முதல் பகுதியில் இருந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குபின் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.

மூச்சுத்திணறல் சீரானதையடுத்து படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு, குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது.
மூன்று வார தீவிர சிகிச்சைக்குபிறகு பச்சிளங்குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதைப்பற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி கூறியதாவது, “பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சையை செய்து உயிரை காப்பாற்றியது பாராட்டத்தக்கது. தனியார் மருத்துவமனையில் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவாக கூடிய இந்த சிகிச்சை அரசு ராணியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறமுடியும்: மகப்பேறு மருத்துவர் உதயபானு

ABOUT THE AUTHOR

...view details