மாணவன் மாரிமுத்து மயங்கி விழுந்த காட்சி புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் இன்று (நவ.14) பள்ளி வகுப்பறை வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணியன் என்பவர் மகன் மாரிமுத்து(14). இவர் அருகே உள்ள பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று விட்டு வீட்டுக்குச் செல்வதற்காகப் பள்ளியின் மேல்மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்று பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காக ஓடிவந்த போது அந்த வளாகத்தில் படிக்கட்டு அருகே மாணவன் மாரிமுத்து மயங்கி விழுந்து உள்ளார்.
இதனைப் பார்த்த சக மாணவர்கள் மாரிமுத்துவை எழுப்பியும் அவர் எழாததால் இது குறித்து, ஆசிரியர்களுக்குத் தகவல் அளித்து அவர்கள் உடனடியாக கீழே விழுந்து கிடந்த மாரிமுத்துவை தூக்கிக் கொண்டு, சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு மாரிமுத்துவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாரிமுத்துவின் குடும்பத்தினர் மத்தியிலும் சக மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் கூறியதன் அடிப்படையில் போலீசார் அவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை மாணவனின் உறவினர்களிடம் காண்பித்தனர்.
அதில் மாணவன் பையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வருவதும் பள்ளி படிக்கட்டு முன்பாக மாணவனுக்கு மயக்கம் ஏற்பட்டு அவன் தடுமாறி கீழே விழும் காட்சிகளும் அதன் பின்பு சக மாணவர்கள் அந்த மாணவனை எழுப்பும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.
தற்போது மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கல்வித் துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளிக்குச் சென்ற மாணவன் மாரிமுத்து குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட நிலையில் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:children's day 2023: குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்களா.? பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது.!