புதுக்கோட்டை:அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் மயக்க மருந்துக்கு பின் தீவிர சிகிச்சைப் பிரிவு, 62 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 நவீன படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதற்கு முன் நேற்று அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்த அதிரடி சோதனையில் அங்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 59 பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக மனநல காப்பகத்திற்கு அனுமதியை ரத்து செய்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளாத சுகாதாரத் துறை இணை இயக்குநர் பணியிட நீக்கம் செய்யப்பட்டதோடு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் 59 பேர்களும் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''நேற்று அன்னவாசல் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தபோது அங்குள்ள மன நல காப்பகத்தைப் பார்வையிட்டபோது அங்கு 59 பெண்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
அந்த காப்பகத்தை தனியார் தொண்டு நிறுவனம் நடத்துகிறது. ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் அரசு இந்த காப்பகத்திற்கு வழங்குகிறது. ஆனால், சம்மந்தப்பட்ட காப்பகம் முறையாக செயல்படவில்லை. அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 59 பேரில் 8 பேருக்கு மேல் சுயநினைவுடன் உள்ளனர். அவர்கள் 59 பேரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.