தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?

மக்களுக்காக, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு, மக்கள் மீது எவ்வித புகார்களும் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பணி குறித்து பெருமையடைகிறார்கள், மக்கள் அவர்களை, இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மரியாதைக்குரியவர்கள்!

தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?
தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?

By

Published : Apr 30, 2020, 11:01 PM IST

Updated : May 1, 2020, 8:54 PM IST

காலம் காலமாக உழைத்தும் வரலாற்றின் பக்கங்களில், தூய்மைப் பணியாளர்களுக்கென்று சிறப்பான வரையறைகள் எதுவும் இல்லை. அதனை மீட்டெடுக்க உதவியிருக்கிறது, கரோனா நெருக்கடி. மருத்துவத் துறை, காவல் துறைக்கு ஈடான நன்மதிப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டதன் விளைவே, தூய்மைப் பணியாளர்கள் என்ற பெயர் மாற்றம். சகிப்புத்தன்மையோடு, களத்தில் இறங்கி பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களை, சமுதாயத்தில் நாம் எங்கே வைத்திருக்கிறோம் என்ற கேள்வியோடு, வெளிப்படுகிறது நம் பிழைகள்.

உயிர் பயம் இல்லாத தூய்மைப் பணியாளர்கள்

உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து கரோனா பெருந்தொற்று, நமக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் அனைவருமே ஒதுங்கி ஓடும் சூழலில், அந்த உடலை மரியாதையுடன் செய்கின்றனர். இப்பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம்தான், எவ்வித காப்பீடும் கிடையாது. ஆனாலும், தன்னலம் கருதாது, நாட்டின் நிமித்தம், மக்களின் பாதுகாப்புக்காக களப்பணியாற்றுகின்றனர். இவர்களின் சேவைக்கு, உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

புதுக்கோட்டை தூய்மைப் பணியாளர்கள்

”இந்தியாவுக்காக, நான் சுத்தம் செய்வேன். என் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள், என்ன வேண்டுமானாலும் பேசட்டும். எனக்கு கவலையில்லை, எனக்கு முன்னால் இருக்கும் அழுக்கைச் சுத்தப்படுத்திக் கொண்டேயிருப்பேன்” என பெருமிதம் பொங்கக் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் குமார்.

தூய்மைப் பணியாளர்களின் எதிர்பார்ப்பு

“நகராட்சியில் கொடுக்கும் வேலைகளை நாங்கள் செய்துவிடுவோம். அதில், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களுக்காக உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது. மக்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுத்தால் போதும். இரண்டையும் ஒன்றாகக் கொடுப்பதால், நாங்கள் கைகளால் பிரித்தெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். நாங்களும் அவர்களைப் போலவே, ரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள்தான். எங்களுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்” என மென்மையான குரலில், மனதைத் தைக்கிறார், தூய்மைப் பணியாளர் சிவகாமி.

புதுக்கோட்டை தூய்மைப் பணியாளர்கள்

கரோனா பெருந்தொற்று ஏற்படாமல் இருக்க, கிருமிநாசினி தெளிப்பது, குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்வது என தூய்மைப் பணிகளை காலை 5 மணி முதலே, செய்யத் தொடங்குகின்றனர். இதுகுறித்து, தூய்மைப் பணியாளர் மாரிமுத்து கூறும்போது, ”காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்கினாலே போதும். இந்தப் பணியை செய்வதில் எனக்கு எவ்வித சிக்கலுமில்லை. மக்கள் நலனுக்காக, இரவும் பகலும் உழைக்கிறேன். இந்தச் சேவை எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்படுகிறார்களா?
ஒரு ராணுவ வீரர் இறந்தால், அதை ஒரு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு போல கருதும் நாம், ஒரு தூய்மைப் பணியாளர் இறந்த செய்தியை, வெறுமனே விஷவாயு தாக்கி பலி என கடந்துவிடுகிறோம். இப்படி, மக்களை சிந்திக்க விடாத, சாதி முறையைக் கேள்வி எழுப்பாமல், அவர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அடையாளப்படுத்துவது வீண் விளம்பரமே.

தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள்

அரசுப் பணியில் இணையலாம் என நினைத்து, ஒப்பந்த பணியாளராகப் பணிக்குச் சேர்ந்து கடைசி வரை தற்காலிக பணியாளராகவே இருக்கும் சிலர், தினக்கூலிகளாகவே தங்களது பணியை நிறைவு செய்கின்றனர். அவர்களுக்கு, ஊதியமும் முறையாகக் கிடைப்பதில்லை.

மக்களுக்காக, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு, மக்கள் மீது எவ்வித புகார்களும் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பணி குறித்து பெருமையடைகிறார்கள், மக்கள் அவர்களை, இனியாவது புரிந்து கொள்ளவேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மரியாதைக்குரியவர்கள்!

இதையும் படிங்க:பனைத்தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா?

Last Updated : May 1, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details