புதுக்கோட்டையில் கரோனா தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களின் வாகனம் பறிமுதல்செய்யப்பட்டு வருவதோடு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.
போலியாக அத்தியாவசியப் பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி சென்ற வாகனங்கள் பறிமுதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த பொதுமக்களுக்கு அந்த இடத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று போலியாக அத்தியாவசிய பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் அத்தியாவசியப் பணியாளரான மருத்துவம், அரசுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஸ்டிக்கர்களை பலர் போலியாக ஒட்டிக் கொண்டு வெளியே சுற்றி வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பலர் அத்தியாவசியப் பணியாளர்களின் ஸ்டிக்கர்களை போலியாக ஒட்டிக் கொண்டு வெளியே வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஸ்டிக்கர்களை காவல் துறையினர் கிழித்து எறிந்தனர். மேலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியதோடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு அந்த இடத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் வரிசையாக அவர்களை நிற்கவைத்து அவர்களின் செல் நம்பர், முகவரி ஆகியவற்றை பதிவுசெய்து வைத்து அவர்களுக்கு முறையான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.