புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் இன்று (ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கரோனா பெருந்தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.ஆர் (RTPCR) ஆய்வகம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் இயங்கி வருவது மட்டுமல்லாமல், இது புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
மேலும், ஐசிஎம்ஆர் (ICMR) வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 2020இல் தொடங்கப்பட்டு, மருத்துவக்கல்லூரியின் கரோனா மாதிரிகள் [Covid-19 Samples] மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மாதிரிகளும் இம்மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும் பரிசோதிக்கப்பட்டு உரிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இது பெருந்தொற்றை உடனுக்குடன் கண்டறியவும், பரவாமல் தடுக்கவும், உரிய சிகிச்சையை தாமதம் இல்லாமல் அளிக்கவும், பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் மிகவும் உதவியாக இருந்தது. மேலும் இந்தியா 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் புதுக்கோட்டை மருத்துவமனை 10 லட்சத்திற்கும் மேல் கரோனா பரிசோதனை செய்து சாதனையாற்றி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த ஆய்வகம் இவ்வளவு தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்கள், மனிதவளம் மற்றும், மருந்துகள் ஆகியவற்றை தங்கு தடையின்றி வழங்கி வருகிறது. மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் எம். பூவதி இவற்றினை மருத்துவமனைக்கு பெற்று தருவதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு, இதுபோன்ற அவசர காலத்தில் தன் உயிர் பொருட்படுத்தாது இன்னுயிர் காப்பதில், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றென்றும் பங்கு வகிக்கும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மனசுதாங்க காரணம்...': நிவாரணமுகாமில் சீரும் சிறப்புமாக நடைபெற்ற வளையலணி விழா!