புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசால் கரோனாவிற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஐஏஎஸ் அலுவலர் சம்பு கல்லோலிக்கர், ஆட்சியர் உமா மகேஸ்வரி, சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. 205 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக குடுமியான்மலை அண்ணா பண்ணையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவிர அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளிட்ட விடுதிகளும் தயார் நிலையில் உள்ளன.
கரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. கூடுதலாக நாகை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது.