புதுக்கோட்டை:சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதில், ''2023-2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு விளையாட்டு விடுதி மாணவ - மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னையில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, பளுதூக்குதல், வாள்வீச்சு விளையாட்டுகளும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டும் மற்றும் மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி - ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னையில் தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து பளு தூக்குதல், ஜீடோ விளையாட்டுகளும், வேலூர் காட்பாடியில் கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி விளையாட்டுகளும் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டுத் தகுதிகள், மேற்காணும் மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையாக விளங்குவதற்கு (01.01.2023) 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ மாணவியர்கள் தகுதியுடையவர் ஆவர்.
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.