தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. களத்தில் 800 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்பு! - தைப்பொங்கல்

Vadamalapur Jallikattu: வடமலாப்பூரில் நடைபெற்று வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

புதுக்கோட்டை வடமலாப்பூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை வடமலாப்பூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 10:50 AM IST

புதுக்கோட்டை வடமலாப்பூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிக வாடிவாசல்களைக் கொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டின் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியிலும், நேற்று 17ஆம் தேதி இரண்டாவது போட்டியாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதியிலும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர், ராஜாபட்டி, குறுக்களையாபட்டி ஆகிய மூன்று கிராம பொதுமக்கள் சார்பில், ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு வடமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று காலை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலில் வடமலாப்பூர் கருப்பர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், நார்த்தாமலை கோயில், வடசேரிபட்டி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தனிநபர் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கு பெற்றுள்ளனர். சீறி வரும் காளைகளை, வீர தீரத்துடன் காளையர்கள் அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளாக குக்கர், மிக்ஸி, கட்டில், சைக்கிள், வெள்ளி காசு, ரொக்கம் பணம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு: 25 காளைகளை அடக்கி திருச்சி சிவா முதலிடம்..!

ABOUT THE AUTHOR

...view details