தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா அச்சம், பருவ மழை.....' விவசாயிகளின் வீடுகளில் அடைகாக்கும் நெல் மூட்டைகள்! - paddy farmers

"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!" - மண்வாசனை வீசும் மருதகாசியின் வரிகள் இவை. ஆனால் விவசாயிகளின் வாழ்வோ இந்த வரிகளுக்கு எதிர்மறையாக இருப்பதுதான் நிதர்சனம். பிள்ளையை வளர்ப்பது போல் நெல்லை பயிரிட்டு வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

இழுத்தடிக்கப்படும் கொள்முதலால் மழையில் நனைந்து நாசமாகிய நெல் மூட்டைகள்
இழுத்தடிக்கப்படும் கொள்முதலால் மழையில் நனைந்து நாசமாகிய நெல் மூட்டைகள்

By

Published : Jul 30, 2020, 7:45 PM IST

வளமைக்கும், செழுமைக்கும் பஞ்சமில்லாத மாவட்டங்களில் ஒன்று டெல்டா மாவட்டமான புதுக்கோட்டை. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு போதுமான மழை பெய்ததாதல் புதுக்கோட்டை விவசாயிகள் இந்த முறை நிறைய எதிர்பார்ப்புகளோடு சாகுபடியை தொடங்கினர்.

ஆனால், "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு அரிசி கூட மிஞ்சாது" எனும் முதுமொழி தான் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. பிள்ளையை வளர்ப்பது போல் நெல்லை பயிரிட்டு வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

இந்த வருடமாவது வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த புதுக்கோட்டை விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்களின் அவமதிப்புகளால் பேரிழப்புகள்தான் போலும்.

நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

"இத்தனை ஆண்டுகளாக தண்ணீரில்லாமல் மடிந்து கிடந்த விவசாயம், நல்ல மழையால் இந்த ஆண்டுதான் உயிர் பெற்றது. நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதையும் இந்தக் கரோனா தொற்று பரவல் கெடுத்து விட்டது" என்று புலம்புகிறார் விவசாயி ஒருவர்.

விவசாயிகளின் வீடுகளில் அடைகாக்கும் நெல் மூட்டைகள்

எல்லா பொருள்களுக்கும் உற்பத்தி செய்பவர்கள் தான் விலையை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் விவசாயத்தில் மட்டும் இந்தக் கொள்கை தவிடுபொடியாகிறது. "30 கிலோ விதைகளை 1200 ரூபாய்க்கு விற்கும் அரசு, அதுவே எங்களிடமிருந்து 60 கிலோ விதையை வெறும் 800 ரூபாய்க்கு வாங்குகிறது.

இது நியாயமா? நெல் மூட்டைகளுக்கும் உரிய விலையில்லை. வருமானமே பார்க்காமல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் எங்கள்மீது அரசுக்கு ஈவு இரக்கம் இல்லையா?" என்று வேதனையோடு கேள்விகனல்களை எழுப்புகின்றனர் புதுக்கோட்டை விவசாயிகள்.

"கரோனா பரவும் என்று வேலையாள்கள் அறுவடைக்கு வர மறுக்கிறார்கள். எப்படியோ அறுவடையை முடித்தோம். தற்போது நெல் மூட்டைகளை வாங்க மறுக்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக திறக்கப்படுவது இல்லை. திறக்கப்பட்டாலும் விலை இல்லை.

முன்பெல்லாம் நெல் அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை ஒரு லோடு பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்குவார்கள். ஆனால் இப்போது வெறும் 2000 ரூபாய்க்கு கேட்கிறார்கள். காரணம் யாரும் அதிக அளவில் மாடு தற்போது வளர்ப்பதில்லை. வயலில் உழுவதற்கு கூட இயந்திரத்தை தான் பயன்படுத்துகின்றனர்" இப்படி அடுக்கடுக்காக புலம்பும் விவசாயிகளின் வேதனையை சொல்லி மாளாது.

2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

இது ஒரு புறமென்றால் மறுபுறம் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் விசாரித்தோம். அவர்களோ, "இந்த ஆண்டு அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை" என்று எதிரும் புதிருமாக பதிலளிக்கிறார்கள்.

மழையில் நனைந்து நாசமாகிய நெல் மூட்டைகள்

பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகள் சுரண்டல் வியாபாரிகளிடம் ஏமாறக்கூடாது என்று தான் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உருவாக்கியது. ஆனால் விவசாயிகளின் பிழைப்பில் மெத்தனப்போக்கை காட்டும் அலுவலர்களுக்கு மட்டும் அரசு விடை தர மறுக்கிறது.

நெல் கொள்முதல் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை நீக்கி, கரோனா அச்சம் காரணமாக ஆங்காங்கு மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

பருவமழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகளை பாதுகாத்து அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும், நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து எங்கள் வாழ்வில் பசுமையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் கடல்சார் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details