தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சி ஆணையருக்கு எதிராக நகராட்சி பணியாளர்கள் தர்ணா...! - நகராட்சி பணியாளர்கள் போராட்டம்

புதுக்கோட்டை: நகராட்சி பணியாளர்களை இழிவாக பேசிய நகராட்சி ஆணையர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நகராட்சி பணியாளர்கள்
நகராட்சி பணியாளர்கள்

By

Published : Oct 29, 2020, 9:13 PM IST

புதுக்கோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையராக ஜஹாங்கிர் பாஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு நகராட்சியில் பணிபுரியும் பெண் பணியாளர்களை இழிவாகப் பேசுவதும் அநாகரிகமாக நடத்துவதுமாக இருந்து வந்துள்ளார்.

மேலும் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காமலும் தீபாவளி அட்வான்ஸ் கொடுக்க முடியாது என்றும் கூறியதை தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (அக்டோபர் 28) நகராட்சி ஆணையர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தை உடனடியாக வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இன்றுவரை நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனை அடுத்து நகராட்சி பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தீபாவளி அட்வான்ஸ் வழங்க வேண்டும். நகராட்சியில் பணிபுரியும் பெண் பணியாளர்களை இழிவாக பேசிய நகராட்சி ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும். நகராட்சி பணியாளர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, தாசில்தார் முருகப்பன், நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மற்ற கோரிக்கைகளை நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து நகராட்சி பணியாளர்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details