தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால் எலும்பை கையில் பொருத்தி புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

புதுக்கோட்டை: எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கால் எலும்பை கையில் பொருத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

pudukkottai medical college

By

Published : Oct 25, 2019, 3:56 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவிகா (30). இவருக்கு இடது மணிக்கட்டின் அருகே கையில் திடீரென கட்டி ஒன்று வளர்ந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் திசுப் பரிசோதனையில் அவருக்கு ஆஸ்டியோ கிளாஸ் டோமா என்று சொல்லப்படும் எலும்பு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

தேவிகாவிடம் நலம் விசாரிக்கும் மருத்துவர்கள்

புற்றுநோய் இருப்பதால், கை எலும்பினை அகற்ற வேண்டும் என்ற நிலையில், புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரதிராஜா, எலும்பு சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜ்மோகன், மயக்க மருத்துவர்கள் டாக்டர் டேவிட், டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவருக்கு 17ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். எனவே, அல்ட்ராசவுண்ட் கருவியின் உதவி கொண்டு இடது கைக்கு உணர்வினை எடுத்துச் செல்லும் நரம்புகளை செயலிழக்கச் செய்தனர்.

இதன் பிறகு தண்டுவடத்திற்கு அருகில் மயக்க மருந்து செலுத்தி கால்பகுதியை உணர்விழக்கச் செய்தனர். மேலும், புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலும்பு 10 சென்டி மீட்டர் அளவிற்கு வெட்டி எடுக்கப்பட்டது. கை நன்றாக இயங்க வேண்டும் என்ற காரணத்தினால் இடது காலிலுள்ள ஃபிபுலா எலும்பு அகற்றப்பட்டு பத்து சென்டிமீட்டர் அளவிற்கு அந்த கால் எலும்பு கையில் பொருத்தப்பட்டது.

அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தேவிகா நலமாக உள்ளார். இன்னும் நான்கு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ‘’இந்த எலும்பு புற்றுநோய் எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் வரலாம். புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும். கால் எலும்பினை எடுத்து கையில் பொருத்தி கைக்கு செயல்வடிவம் கொடுத்து இருப்பது மிகப்பெரிய சாதனை.

அதுவும் மயக்க மருத்துவத் துறையானது அல்ட்ரா சவுண்டு மூலம் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் ஒரு கருத்தரங்கை இந்தக் கல்லூரியில் எற்கனவே நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அல்ட்ரா சவுண்டு உதவி கொண்டு அந்த ஒரு பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ததும் மிகப்பெரிய சாதனையாகும். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின் சிகிச்சை காலங்களில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பராமரிக்கப்படுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details