வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே சில மாதங்களாக புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருவ மழையை நம்பி எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய மழையால் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, மீமிசல், ஆலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மழையை மட்டுமே நம்பி உள்ள மானாவாரி விவசாயிகள் பயிர் நடவு, களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பயிர் நடவு செய்த நூற்றுக்கணக்கான பெண்கள் சினிமா, கிராமிய பாடல்களைப் பாடி அசதியை போக்கிக் கொண்டனர்.
கிராமிய பாடல்களைப் பாடிய விவசாயிகள் மேலும், இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘வானம் பார்த்த பூமியாக இருக்கும் ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் 5,400 ஏக்கர்களில் சாகுபடி செய்துள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக மழை இல்லாததால் எங்கள் பகுதி பெரும் வறட்சியை சந்தித்தது.
இந்த வருடம் எதிர்பார்த்தபடி சரியான நேரத்திற்குப் பருவமழை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகளுக்கு தாமதமின்றி மானிய விலையில் உரம் வழங்க வேண்டும், பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் படிக்க: ‘யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு’ - விவசாயிகள் குற்றச்சாட்டு!