புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகி கமலா செல்வம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மீது புகார் தெரிவித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருப்பது புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சருக்கு வணக்கம். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறொன்றும் எனக்கோ, என் குடும்பத்திற்கும் தெரியாது. தமிழ் நாட்டில் ஒரே கட்சி, ஒரே சின்னம், ஒரே கொடி, நம் கழகம் தான். அது நம் தலைவர் கருணாநிதி வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகமாகத் தான் இருக்க வேண்டும்.
கடந்த 30 வருட காலமாக என்னை வளர்த்த பெரியண்ணன் காலத்தில் இருந்து நான் கட்சிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன், எதற்கும் கலங்க மாட்டேன், எதற்கும் அஞ்சாத என்னுடைய தைரியம் எல்லாம் தலைவர் கருணாநிதி கொடுத்த ஊக்கமும், பெரியண்ணன் வளர்த்த வளர்ப்பும், அதையெல்லாம் முறியடித்து விடுவது போல இருக்கிறது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செல்லபாண்டியனின் செயல்.
நான் யாரிடமும் எதுவும் கேட்க கூடாது என்றும், எந்த அமைச்சர்களையும் சந்திக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். மேலும், ‘உன்னை தொலைத்து விடுகிறேன் பார்’ என்று மிரட்டுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த போது மேடையில் நான் ஏறி நின்றது தவறா, அந்த குற்றத்திற்கு இது தான் தண்டனை என்றால் அதை நான் ஏற்று கொள்ள தயங்க மாட்டேன் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன். என்னை தண்டிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.
அரசு கொறடாவாக இருந்த பெரியண்ணன் கூட இந்த அளவு எங்களை கஷ்டப்படுத்தியது இல்லை. அவர் வளர்த்த பிள்ளைகள் நாங்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் நாங்கள் தவித்த தவிப்பு எண்ணில் அடங்கா துயரம், நீங்கள் எப்போது முதலமைச்சர் ஆவீர்கள் என்று நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை, இலவு காத்த கிளி போல காத்து கொண்டு இருந்தோம்.
நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று உங்களுக்காகவே உழைத்தேன், உங்களுக்காகவே பயணித்தேன், நீங்கள் யாரை வேட்பாளராக நிறுத்துகீறிர்களோ அவர் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தேன். எல்லா தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பணி செய்தேன்.
என் குடும்பம், என் பிள்ளைகளை விட்டு விட்டு கட்சிக்காக உழைத்தேன், ஒரு மாதம் வாக்கு பெட்டி வைத்து இருந்த இடத்தில் அமைச்சர் ரகுபதி அண்ணனுக்காக காவல் காத்த எனக்கு விஜயபாஸ்கர் வசம் நேருக்கு நேர் எதிர் கொண்டு ஒரு தனிப்பட்ட பெண்ணாக ஒரு மாதம் சிறையில் தண்டனை பெற்றேன்.
விஜயபாஸ்கர் என் மகன் வேலையைப் பரித்தார். என்னால் என் மகன் பாதிக்கப்பட்டு வாழ்க்கை இழந்து நிற்கிறான். எதற்கும் அஞ்சாமல் என் தளபதி முதலமைச்சராக வருவார் நம்ம நல்ல நிலைக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு உழைத்தேன். ஆனால் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் என்னை காலில் போட்டு மிதிக்கிறார்.
என்னால் தாங்க முடியவில்லை தளபதி, எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் தளபதி, உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார். எனக்கு வேற நாதி இல்லை மன அழுத்தம் தாங்க முடியாமல் என் குடும்பம், என் பிள்ளைகள் இறந்து போகிறோம். எங்களுக்கு இரங்கல் சொல்லுங்கள் தளபதி என்று வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த கடிதம் பரவியது.
இதன் உண்மைத்தன்மையை ஆராயும் போது, ‘மகளிர் அணி நிர்வாகியாக இருந்த கமலா செல்வம், புதுக்கோட்டையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், அவர்களது பிறந்த நாளை கொண்டாடாமல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பிறந்தநாளன்று புதுக்கோட்டை காது கேளாதோர் பள்ளியில் உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும், திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இளைஞர் அணியினரை அழைக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இளைஞர் அணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி மேடை ஏறுவதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் மேடையில் வீற்றிருந்தனர். அப்போது வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூட்டம் அதிகம் இருப்பதாக கூறி கட்சியினரை கீழே இறங்குமாறு கூறினார். கட்சியினர் இறங்காமல் இருந்ததால் கைகூப்பியவாறு "தயவு செய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள்" என்று கூறினார்.
அப்போது மகளிர் அணி நிர்வாகி கமலா செல்வம் மேடையிலேயே இருந்ததால், அவர் மீது கோபத்தில் இருந்தார் அமைச்சர் ரகுபதி. இதனைப் பார்த்த திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் அமைச்சர் சொல்லுக்கு மரியாதை இல்லையா? என்று கோபத்தில் கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த திமுக மகளிர் அணி நிர்வாகியையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், பாஸ்கர் என்பவர் தவறான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறி கமலாசெல்வம் உள்ளிட்ட மகளிர் அணியினர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் தெரிவிக்காமல் இருந்ததாக மகளிர் அணி நிர்வாகி கமலா செல்வம் மீது திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது
இதையும் படிங்க:பேரிஜம் ஏரியில் பரிசல் சவாரிக்கு தடை விதிக்க வேண்டும் - நடவடிக்கை எடுப்பதாக பழனி எம்எல்ஏ உறுதி!