வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் பரபரப்பாக பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை யார் ஆட்சி வரும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மிகவும் கடுமையான போட்டியும் நிலவ ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் நேற்று(பிப்.24) அம்மா பிறந்த நாளை ஒட்டி அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தத் தொடங்கி விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் விராலிமலை தொகுதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊர் என்பதால் அத்தொகுதியில் விஜயபாஸ்கர் தான் போட்டியிடுவார், அவர் தான் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சியினர் மத்தியிலுமே உள்ளது.
அதனால் விராலிமலை தொகுதிக்கு இதுவரை யாரும் விருப்பமனு கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அதே அதிமுகவைச் சேர்ந்த ஆலங்குடி தொகுதி நெய்வத்தலி பகுதியைச் சேர்ந்த நெவலிநாதன் என்பவர் தனது ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தது மட்டுமல்லாமல் விராலிமலை தொகுதிக்கும் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் நெவலிநாதன். இவர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார். ஆலங்குடிக்கு விருப்பமனு படிவத்தை வாங்கிய இவர் அமைச்சரின் தொகுதியான விராலிமலைக்கும் விருப்பமனு வாங்கியதோடு அதை முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அமைச்சரையும் ஆத்திரப்படுத்தியதாக தெரிகிறது.
அமைச்சரின் கோபத்திற்கு காரணம், விராலிமலை தொகுதியை பொறுத்தவரை பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வளர்ச்சி பணிகள் நடக்க அவர் காரணமாக இருந்து இருக்கிறார். அதேபோல் தன் சொந்த செலவில் சில கோடிகளை வாரி இரைத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, விளையாட்டு உபகரணங்கள் என தொகுதி முழுக்க வழங்கினார். மேலும் சமீபத்தில் தொகுதி முழுக்க கோலப்போட்டிகளை நடத்தினார்.
இப்படி தன் தேர்தல் பணியை பல மாதங்களுக்கு முன்பே தொடங்லிவிட்ட அமைச்சர், இந்த முறை தன்னை எதிர்த்து யாரும் சீட் கேட்க மாட்டார்கள் என நினைத்து இருந்தார். அதே சமயம் தனக்காக மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதியிலும் அமைச்சர் தங்கள் தொகுதியில் நிற்க வேண்டும் என பலபேரை விருப்பமனு செலுத்த செய்து தலைமையிடம் கெத்துகாட்ட நினைத்து இருந்தார். ஆனால் ஆரம்ப நாளிலேயே அவரின் தொகுதியில் அடுத்த தொகுதியை சார்ந்த ஒருவர் பணம் கட்டியது அவருக்கு சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது.
இது குறித்து விராலிமலைக்கு பணம் கட்டிய வழக்கறிஞர் நெவலிநாதனிடம் கேட்டபொழுது; நான் யாருக்கு எதிராகவும் பணம் கட்டவில்லை, அந்த தொகுதியில் நிற்க விரும்பித்தான் விருப்பமனுவை வாங்கியுள்ளேன், நான் வசிக்கும் ஆலங்குடிக்கும் வாங்கியுள்ளேன். கட்சி தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
நான் விராலிமலையை விரும்புவதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு அரசின் வளர்ச்சி பணிகள் இங்கு நடந்துள்ளது. இந்த தொகுதி ஏற்படுத்தபட்டதிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தான் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றாலும், தேர்தலில் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொகுதியில் நான் சார்ந்த முத்திரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மக்களிடம் தங்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கின்ற ஒரு ஏக்கம் இருக்கிறது.
மேலும் ஏறத்தாள இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்ட ஒரு இயக்கத்தில் ஏற்கனவே மூன்று தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஒருவருக்கே 4 வது முறையாக வாய்ப்பு கொடுப்பதை விட புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க கட்சி தலைமை முடிவுசெய்து அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினால் அமைச்சரின் ஆதரவோடும், அந்த தொகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் தமிழ்நாடு; தேர்தல் உலா- 2021