தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலர்ந்த காதலால் உயர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கை - புதுக்கோட்டையில் ஒரு காதல் கோட்டை! - Love stories

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மற்றும் கறம்பக்குடியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய இருவரும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்ற நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றபோது மலர்ந்த காதலால் வாழ்க்கை உயர்ந்த ரகசியத்தை காதலோடு இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மலர்ந்த காதலால் உயர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கை - புதுக்கோட்டையில் ஒரு காதல் கோட்டை!
மலர்ந்த காதலால் உயர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கை - புதுக்கோட்டையில் ஒரு காதல் கோட்டை!

By

Published : Apr 11, 2023, 9:56 PM IST

புதுக்கோட்டை: சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட மாற்றுத்திறனாளியான சண்முகம், தகப்பனை இழந்த நிலையில், தாயாரின் உதவியோடு பி.காம் பட்டம் பெற்றுள்ளார். எப்படியாவது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என நினைத்த சண்முகத்திற்கு, அவரது தாயாரின் திடீர் மறைவு, அவருக்கு ஆதரவு இல்லாமல் போனது. எனவே புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகில் சிறிய பெட்டிக்கடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சண்முகம், மிகவும் சிரமத்திற்கு இடையில் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

மலர்ந்த காதலால் உயர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்க்கை - புதுக்கோட்டையில் ஒரு காதல் கோட்டை!

இதனிடையே நண்பரின் தயவோடு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படுவதை அறிந்த சண்முகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச இருசக்கர வாகனத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினார். இதற்கான வெரிபிகேஷன் அனைத்தும் முடிந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சண்முகத்திற்கு அழைப்பு கிடைத்துள்ளது. இதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

விண்ணப்பத்தால் விளைந்த காதல்: அப்போது சண்முகத்தைப் போலவே போலியோவால் பாதிக்கப்பட்டு, தாய் - தகப்பனை இழந்து, உறவினர்கள் உதவியோடு வாழ்ந்து வந்த முத்துலட்சுமியின் அறிமுகம் சண்முகத்துக்கு கிடைத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த முத்துலட்சுமி, தையல் கற்றுக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தை அரவணைத்து வாழ்ந்து வந்த நிலையில், இருசக்கர வாகனம் தேவைக்காக விண்ணப்பித்து, அவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அங்கு மாற்றுத்திறனாளி சண்முகம், தனது படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு, மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளார். அதைப் பார்த்த முத்துலட்சுமியும், தனது படிவத்தை பூர்த்தி செய்ய சண்முகத்திடம் கொடுத்துள்ளார். அப்போதுதான் இருவருக்குமான காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் இருசக்கர வாகனம் உறுதியான நிலையில், சண்முகத்தின் காதலை தனது குடும்பத்தாரிடம் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதற்கு முத்துலட்சுமி குடும்பத்தார் மறுப்பு தெரிவிக்கவே, சண்முகத்தின் மீதான காதல் மற்றும் நம்பிக்கையால், தனக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்திலேயே சண்முகம் வசிக்கும் அந்த சிறிய பெட்டிக் கடைக்கு வந்துள்ளார் முத்துலட்சுமி. அன்றைய தினமே அவரை ஏற்றுக் கொண்ட சண்முகம், முத்துலட்சுமியை அழைத்துக் கொண்டு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் முடித்துள்ளார்.

சொந்த தொழிலில் முன்னேற்றம்: குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி மாற்றுத்திறனாளிகளின் குடும்ப வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியது. பெட்டிக்கடை வருமானம், அந்த பெட்டிக்கடையிலேயே வசிப்பது, சாலையோரத்தில் வசிப்பது என இவர்களது வாழ்க்கை சில மாதங்கள் கடந்தது.

அப்போது முத்துலட்சுமியின் மனதில், நாமும் இந்த சமூகத்தில் அனைவருக்கும் சமமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது. அதேநேரம் சண்முகம் பெட்டிக்கடை வருமானத்தை நம்பாமல், நண்பர்களின் உதவியோடு, வார சந்தைகளில் மீன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்.

இதன் மூலம் போதிய வருவாய் கிடைக்கவே, இருவரும் வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர். இப்படியே இவர்களது வாழ்க்கை பயணிக்க, சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதற்கு போதுமான வருவாயை நாம் ஈட்ட என்ன செய்ய வேண்டும் என இருவரும் கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது சண்முகம், தானே சொந்தமாக மீன் சுத்தம் செய்யும் தொழில் ஈடுபடப் போவதாக முத்துலட்சுமிடம் கூறியுள்ளார்.

இதற்கு உடனே ஆதரவு தெரிவித்த முத்துலட்சுமி, அவரது முயற்சியை வெகுவாக பாராட்டி உள்ளார். இதனையடுத்து மீன் சுத்தம் செய்யும் தொழிலில் போதுமான வருவாய் கிடைக்கவே, தனக்கு உதவியாக வேறொரு நபரை அழைத்துச் செல்ல உள்ளதாக சண்முகம், முத்துலட்சுமிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட முத்துலட்சுமியே, மீன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்று, தனது வாகனத்திலேயே இருவரும் தங்கள் தொழிலை கவனிக்கத் தொடங்கினர்.

சொந்த வீட்டில் தம்பதி: அப்போதுதான் வாடகை வீடு வேண்டாம், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகத் தொடங்கியது. இருவரும் புதுக்கோட்டை, நரிமேடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் சொந்த வீடு வாங்க விண்ணப்பித்தனர். அவர்களின் எண்ணம் போல், அவர்களுக்கு வீடும் ஒதுக்கப்பட்டது. அதற்கான தவணைத் தொகையை, மீன் சுத்தம் செய்யும் தொழில் மூலம் வருவாய் ஈட்டி, 10 மாதத்தில் வீட்டிற்கான முழுத் தொகையையும் செலுத்தி உள்ளனர்.

தற்போது நரிமேடு குடிசை மாற்று வாரியத்தில் தங்களுக்கான சொந்த வீட்டில் சண்முகம் - முத்துலட்சுமி தம்பதி, நிம்மதியோடு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வழக்கம்போல் வாரத்தின் 7 நாட்களும் புதுக்கோட்டை நகர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, மீன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியால் இருவருக்குமான ஓய்வு நேரம் என்பதே மிகவும் குறைவாகத்தான் போய்விட்டது. மேலும் இருவருக்கும் மிக முக்கிய உணவாக தேநீரே உள்ளது.

நாங்கள் கோடீஸ்வரர்கள்தான்..திருமணமாகி ஐந்து ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலையே இல்லாமல் இருக்க, பக்கத்து வீட்டார்களின் குழந்தைகளே இவர்களது குழந்தைகளாக வளர்கின்றனர். இந்த நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள் மாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் பேசியபோது, “இந்த வாழ்க்கையை எப்படி கழிக்கப் போகிறோம் என பலரும் நினைக்கும் நிலையில், நாங்கள் இருவரும் சேர்ந்ததே எங்கள் வாழ்க்கையை மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் என்ற ஒரு பிரச்னையில், எப்படி வாழப் போகிறோம் என்ற பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் எந்த ஆதரவும் இன்றி, சுயமாக இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறோம். இந்த உலகத்தில் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் வாழ வழி இன்றி தவிக்கின்றனர். எங்களுடைய வாழ்க்கை அவர்களுக்கு உந்துதலாக அமைய வேண்டும்.

மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே இல்லாமல் தற்போது வரையிலும் வாழ்ந்து வருகிறோம். தமிழ்நாடு அரசு சார்பில், எங்களுக்கு அரசு வேலை ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும். உலகத்தின் கோடீஸ்வரர்களை பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிக்கிறது. ஆனால் மனிதர்களை அன்பு, பாசம், நேசம் இவைகள் மட்டுமே தீர்மானிக்கிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளாக நாங்கள் இருவரும், இந்த உலகத்தின் முதல் கோடீஸ்வரர்களே” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:எலியை கொன்றவர் மீது கொலை வழக்கு! இது என்ன புதுக் கதையா இருக்கு!

ABOUT THE AUTHOR

...view details