புதுக்கோட்டை: பாஜகவை பொறுத்தவரை திமுக ஆட்சியில் எதுவும் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என புதுக்கோட்டை பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து வருகிறார். இதன் மூன்றாம் கட்ட பயணத்தை, கடந்த 16ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து தொடங்கிய அவர், வரும் நவம்பர் 5ஆம் தேதி புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியிலும், 6ஆம் தேதி கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜகவினர் சார்பில், பிளக்ஸ் பேனர்கள், ஆட்டோ விளம்பர பேனர்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவது, மேளதாளம், நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், குங்குமம், தாலிக் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை என் மண் என்மக்கள் யாத்திரையில் பங்கேற்கும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கி அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, புதுக்கோட்டை நகர் பகுதியான திருவப்பூர் ரயில்வே கேட் அருகே, கொடி கம்பத்தில் கொடி கிழிக்கப்பட்டு இருந்ததால் அந்த கொடியை மாற்றும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் கிழிந்த பழைய கொடியை அகற்றிவிட்டு புதிய கொடியை ஏற்றக்கூடாது என்று கூறி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அங்கு திரண்டனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில், காவல்துறையிடம் அனுமதி பெற்று கொடியை ஏற்ற வேண்டும் என்றும், அதுவரை கொடி ஏற்ற அனுமதி இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் பேசியதாவது, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபயணம் ஏற்று மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வரும் 5ஆம் தேதி விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரிலும், 6ஆம் தேதி கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
மாநில தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில், பொதுமக்கள் சார்பில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டைக்கு வருகை தருவதை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் பொதுமக்களிடம் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டு செல்கின்றனர். திமுகவைப் போன்று தலைவர்கள் வரும் போது 200 ரூபாய் பணம், பிரியாணி கொடுத்து அழைத்து வருவது என்பது பாஜகவிற்கு வழக்கமில்லை.