புதுக்கோட்டையில் இறந்தவர் சடலத்தை அடக்கம் செய்ய வழி வேண்டி போராடிய பொதுமக்கள் புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள தாழம்பட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், இறந்தவர்களின் உடலை அந்தப் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் மற்றும் தகனம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த மயானத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வாங்கி தனது பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளார். இதையடுத்து தனது நிலத்தின் வழியாக மயானத்திற்கு யாரும் செல்லக்கூடாது என அந்த நபர் முள்வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம் தகராறு ஏற்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தாழம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மனைவி சகுந்தலா (60) நேற்று (செப்.5) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இன்று (செப்.6) அவரின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது, மயானத்திற்கு செல்லும் வழியானது அடைக்கப்பட்டு இருந்ததால், ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் அடைத்து ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி பொதுமக்கள் திடீரென புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்ட போது, நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் மயான கரைக்கு செல்லும் சாலையை தனிநபர் தனது பட்டா இடம் எனக்கூறி முள்வேலி வைத்து அடைத்து வருவதாகவும், சென்ற முறை ஒருவர் இறக்கும் பொழுது இதேபோல் முள்வேலி வைத்து அடைத்தாகவும், பின்னர் அதிகாரிகள் வந்து திறந்ததாகவும் கூறினர்.
மேலும் இதேபோன்று இந்த நபர் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதால் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த தனிநபரை கண்டித்து பொதுமக்களுக்கு நிரந்தர மயான பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் மற்றும் திருமயம் வட்டாட்சியர் புவியரசன் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் சம்பந்தப்பட்ட முள் வேலி மற்றும் இரும்பு கேட் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பாதை வழியே, இறந்த சகுந்தலாவின் உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று, இறுதிச் சடங்கு செய்தனர்.
இதையும் படிங்க:பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?