புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் போது மாநகராட்சியில் இணைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை தற்போது நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று சமூக வலைத்தளத்தில் வேகமாகத் தகவல் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தேக்காட்டூர், மேல தேமுத்தப்பட்டி, கீழ தேமுத்துப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய பஞ்சாயத்துகளை மாநகராட்சியில் இணைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக முக்கியமான 15 நபர்களை அழைத்துச் சென்றனர். இதேபோன்று 9ஏ நத்தம்பண்ணை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை அடுத்து தேக்காட்டூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த அடைக்கன் கூறும்போது, "நாங்கள் இருக்கும் தேக்காட்டூர் பஞ்சாயத்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் சட்டமன்றம், பஞ்சாயத்து, வார்டு ஆகிய அனைத்தும் மாறிவிடும். எங்கள் பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றோம். எனவே நாங்கள் பஞ்சாயத்தில் இருக்கின்றோம் மாநகராட்சி தேவை இல்லை" என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து தேக்காட்டூர் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் கவிதா கூறும்போது, "எங்களுடைய பஞ்சாயத்துகள் மாநகராட்சியில் இணைக்கப்பட்டால் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் பாதிக்கும். குறிப்பாக, பொதுமக்களின் மிக முக்கியமான வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் அபாயம் உள்ளது. இதுமட்டும் அல்லாது விளை நிலங்கள் பாதிக்கப்படும் மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதால் எங்களுடைய பஞ்சாயத்தை மாநகராட்சியில் இணைக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து 9ஏ நத்தம்பண்ணை பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், "பஞ்சாயத்தில் இருந்துதான் எங்களின் கிராமத்தை வளர்ச்சி அடைய செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் சேர்த்தால் இன்று உள்ள நகராட்சியின் நிலையைப் போன்று தான் நாங்கள் இருப்போம். எனவே எங்கள் பகுதி மக்கள் அனைவரும் இது கிராம பஞ்சாயத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் அரசு மக்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கட்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் எதிரொலி - அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!