புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் தலைமை காவலர் ராமையா. இன்று, ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே இளைஞர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாக ஆலங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தலைமை காவலர் இராமையா சென்று பார்த்தபோது அங்கு பல்வேறு கொலை, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அப்துல்கலாம் என்பவரது மகன் முஸ்தபா அரசமரம் பகுதியில் இருக்கும் ஆட்டோ நிறுத்துமிடத்தில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் மதுபோதையில் தகாத வார்த்தைகளைக் கூறி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதை பார்த்த தலைமை காவலர் ராமையா முஸ்தபாவை அமைதியாக இங்கிருந்து கிளம்புமாறு கூறியுள்ளார். ஆனால், முஸ்தபா காவலர் ராமையா பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது சட்டையைப் பிடித்து தாக்க முயன்றுள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் பின்னர் உதவிக்கு வந்த சக காவலர்கள் இருவரின் உதவியுடன் முஸ்தபாவை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும், இதுகுறித்து முஸ்தபா மீது காவலரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்தபா மீது கொலை மற்றும் கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.