தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி.? சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் - pudhukottai news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 18, 2023, 8:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் தாலுகா புண்ணியவயல் ஊராட்சிக்கு உட்பட்ட எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கடந்த வாரம் எழுநூற்றிமங்கலம் நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.இந்த நியாய விலைக்கடையில் வாங்கப்பட்ட அரிசியை சமைத்து சாப்பிட்ட 10 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ரேஷனில் பிளாஸ்டிக் அரிசி

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ரேஷன் கடையில் வாங்கப்பட்ட அரிசியை தண்ணீரில் ஊற வைத்தபோது, அரிசி பிளாஸ்டிக் போல் மிதந்துள்ளது. இதனால், அவர்கள் நியாய விலைக்கடையில் வாங்கப்பட்ட அரிசியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று ஊர்மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் அனைவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், கலப்பட அரிசிக்கு பதிலாக மாற்று அரிசி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதிமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆவுடையார் கோயில் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது, நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்ட சாதாரண அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் நியாய விலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்த மக்கள் அச்சப்பட தேவையில்லை, அவ்வாறு அச்சம் இருந்தால் அவர்களுக்கு சாதாரண அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுய தொழில் தொடங்க புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details