கிராம சபை தணிக்கை குழு கூட்டத்தை புறக்கணித்த மக்கள் புதுக்கோட்டை: ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டி ஊராட்சியில் நேற்று கிராமசபை தணிக்கை குழுக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் தணிக்கை குழு அதிகாரி இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு அதிகாரிகள் நடத்தி வந்த நிலையில், இதில் கலந்து கொண்டவர்கள் மாங்கனாம்பட்டி ஊராட்சி கிராம நிர்வாக உதவியாளர் பணி இடத்தை நிரப்பியது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது கேள்வி எழுப்பியவர்களுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்தவர்களும் கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தும், நேர்காணலில் கலந்து கொண்டும் அவர்களை நியமனம் செய்யாமல், புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியை பணியில் அமர்த்தி உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணி, ஊராட்சி செயலர் பணி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருந்து, அதனை பொறுப்பாளர்களை வைத்து ஊராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்த நிலையில், தற்போது கிராம நிர்வாக உதவியாளரை மட்டும் வெளியிலிருந்து நியமனம் செய்துள்ளனர்.
எங்கள் பகுதிக்கு ஊராட்சி செயலர் தனியாக நியமிக்காததால், வேறு ஒரு ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி செயலர்கள் மாங்கனம்பட்டி ஊராட்சி பொறுப்பாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தங்களது கோரிக்கையை அவரிடம் எடுத்துரைக்க முடியவில்லை. உடனடியாக எங்கள் பகுதிக்கு நிரந்தர ஊராட்சி செயலரை நியமிக்க வேண்டும்.
அதுவும் எங்கள் பகுதியிலேயே படித்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருப்பதால் அவர்களின் யாரேனும் ஒருவரை தேர்வு செய்து ஊராட்சி செயலராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நடைபெற்ற கிராம சபை தணிக்கை குழு கூட்டத்தை 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட அனைவரும் புறக்கணித்தோம்” என தெரிவித்தனர். இந்த பிரச்சனை ஆரம்பித்த உடனேயே தணிக்கை குழு அதிகாரி இஸ்மாயில் அந்த பகுதியை விட்டு சென்றார்.
இதையும் படிங்க:டிரான்ஸ்ஃபராக்கப்பட்ட தென்காசி கலெக்டர் - வருத்தத்தில் விவசாயிகள்; அவர் செய்த சம்பவம் என்ன?