புதுக்கோட்டை:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து இனிப்பு கடைகளிலும் பலகாரம் உற்பத்தி மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய திணை வகைகள், சிறுதானியங்களை கொண்டு விதவிதமாக முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள்.
இந்த நிறுவனம் பாரம்பரியத்தையும், பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிறுதானியங்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் இத்தலைமுறைக்கும் பிடித்த வகையில் முறுக்கு, மிக்சர், அதிரசம் போன்ற பல்வேறு வகையான சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,364 விவசாயிகளை ஒன்றிணைத்து இயங்கி வரும் விவசாய உற்பத்தியாளர் கம்பெனியில் விவசாயிகளிடமிருந்து அவர்கள் வயல்களில் விளைவிக்கப்படும் பாரம்பரிய நெல், சிறுதானிய பயிர்கள் பெற்று அதற்கு மதிப்பு கூட்டப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு சென்று விற்கப்படுகிறது.
பலகார வகைகள்: தினை அதிரசம், கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர்,வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளைச்சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளைச்சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காராசேவு, வரகு காராசேவு என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த திண்பண்டங்கள் என பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.