தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பேட்டி புதுக்கோட்டை: நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியாவிலேயே முதல் முறையாக புதுக்கோட்டையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் ஆணையத்தின் சார்பில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு உள்ள குறைகள், புகார்கள் ஆகியவற்றை சிறப்பு அமர்வில் தெரிவிக்கலாம். அன்றைய தினமே அதற்குண்டான தீர்வு விசாரணை நடத்தி மேற்கொள்ளப்படும், இந்தியாவிலேயே புதுக்கோட்டையில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அமர்வு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் ஆணையத்தின் 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
சிதம்பரம் கோயிலின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே தீட்சிதர்கள் மற்றும் குழந்தை திருமண விவகாரத்தையும் தமிழக அரசு பிரச்சனையாக மாற்றியுள்ளது. சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை. சிறுமிகள் கொடுத்த ஆடியோ, வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்தில் உள்ளது. திங்கள்கிழமை ஆளுநரையும் அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் 132 அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்காமல் இருவிரல் பரிசோதனை விவகாரத்தை கையில் எடுத்து உண்மைக்கு புறமான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் மற்றும் இரு விரல் பரிசோதனை குழந்தை திருமண விவகாரத்தில் நான் இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை. நான் கூறிய கருத்துக்கள் முதல் நாள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு திரித்து கூறப்பட்டது. அதன் பின்னர் நான் தன்னிநிலை விளக்கம் அளித்தேன்.
ஆணையத்தின் சார்பில் குழந்தைகளிடம் விசாரணை செய்தபோது, அன்றைய தினம் மருத்துவர்கள் கைகளில் உரைகளை அணிந்து கொண்டு தங்களுடைய பிறப்புறுப்புகளில் சோதனை செய்தனர் என்று ஆணையத்தின் முன்பாக கூறியுள்ளனர். இதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆணையத்தில் உள்ளது. இதேபோன்று பல்வேறு விசாரணைகள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டு 132 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆணையத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.
இதற்கிடையில் திங்கள்கிழமை ஆளுநரை சந்தித்து ஆணையத்தின் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்து அவர் கூறியது போன்று இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது. உண்மை என்ற தகவலையும் அவரிடம் கூறிவிட்டு 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையை எவ்வாறு செய்தார்கள் என்பதற்கான விசாரணையை நடத்த ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்வேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னை பற்றி தவறான கருத்துக்களை கூறி வருகிறார். ஆணைய உறுப்பினர் என்றால் யார் என்பது கூட தெரியாமல் மா.சுப்பிரமணியன் பேசி வருகிறார். ஆணையத்தின் 132 பக்க அறிக்கையையும் இரு விரல் பரிசோதனை செய்வதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டால் பொது வழியில் அமைச்சர் மன்னிப்பு கேட்க தயாரா அவர் மன்னிப்பு கட்டாயம் கேட்க வேண்டும்.
ஆளுநரை குறை கூற வேண்டும், அவருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் இரு விரல் பரிசோதனையும் ஒன்று. ஆளுநர் கூறியது போன்று சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டது உண்மை.
இன்று தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர்கள் எடுக்காமல் இரு விரல் பரிசோதனை விவகாரத்தை மட்டுமே பேசி வருவது உள்நோக்கத்தால். சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்று அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வழகையில் வெளியிடப்பட்டுள்ளது. அது சிறுமிகள் வயதுக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள். அதனை திரித்து படங்களை வெளியிட்டுள்ளனர் என்று தீட்சிதர்கள் ஆணையத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிதம்பரத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசின் வசம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தீட்சிதர்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் நடக்காத குழந்தைகள் திருமணத்தை நடந்தது போல சித்தரித்து பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது. குழந்தைகள் விவகாரத்தில் அரசியல் சாயம் பூச வேண்டாம். எதற்காக இதில் ஏன் அரசியல் சாயம் பூச வேண்டும்.
முதல்வர் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. ஆனால் அமைச்சர்களின் நடவடிக்கைகள் அவ்வாறு இல்லை. ஆணையம் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யும், சிதம்பரத்தில் குழந்தைகளையும் மருத்துவர்களையும் தமிழக அரசு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் ஆணையத்தில் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லை.. 10 கி.மீ குழந்தை சடலத்தை சுமந்த பெற்றோர்.. வேலூரில் நிகழ்ந்த அவலம்!