புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சியர் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலை வகிக்க, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.
கூட்டம் முடிந்து பேசிய திருநாவுக்கரசர், "பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளில் பணிகள் நடைபெற்ற விவரம், முடிவுற்றப் பணிகள், நடைபெறவுள்ள பணிகள், திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத் தொகை, செலவு விவரம், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள், அதற்குப் பெற வேண்டிய நிதிஒதுக்கீடு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வுசெய்யப்பட்டது.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரி நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளுக்கான குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட 44 திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து ஆய்வுசெய்யப்பட்டது.