8 ஆண்டுகளாக அவதியடையும் இளைஞர் புதுக்கோட்டை: பொன்னமராவதி, பாண்டிமான் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தற்போது 34 வயதான வெங்கடேசன் 8 வருடங்களுக்கு முன்பு சொந்தமாக மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற சிறு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாளடைவில் அவரது ஒவ்வொரு பகுதி நரம்பும் பாதிக்கப்பட்டு பிறகு தலைக்குக் கீழ் உள்ள பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட அவரை திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை என பல்வேறு பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வெங்கடேசனின் வாய் மட்டுமே பேச, சாப்பிட முடியுமே தவிர மற்றபடி தலைக்குக் கீழ் உள்ள பகுதிகள் உணர்ச்சியற்று காணப்பட்டு வருகிறது. மேலும், சிறுநீர் குழாய் மூலம் வெளியேற்றப்படுவதோடு படுக்கையிலே மலம் போகும் நிலையில் வெங்கடேசன் அவதியடைந்து வருகிறார்.
இவ்வாறு 8 வருடமாகப் போராடி வரும் வெங்கடேசனை அவரது தாய் நாச்சம்மை கவனித்து வந்தார். அவருக்கும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதாலும் வயதோகித்தாலும் வெங்கடேசனைப் பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் வெங்கடேசனை அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என அவரது தாயாரும், வெங்கடேசனும் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கால்களை இழந்தவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்