புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 93 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கி அதன் மூலமாக அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தமிழக அரசு பள்ளியில் படித்து பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்றும், எனவே கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது முற்றிலும் தவறானது. அந்த மாணவி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது இருப்பிடமும் நாமக்கல் மாவட்டத்தில் தான் உள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிக்கலாம். ஆனால், இருப்பிடச்சான்று ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு ஸ்டாலின் கூறிய அந்த மாணவி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, குற்றச்சாட்டை கூறும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து குற்றச்சாட்டை கூற வேண்டும். ஸ்டாலின் கூறிய பொய்யான குற்றச்சாட்டால் ஒரு குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது.
’ஸ்டாலினின் பொய்யால் ஒரு குடும்பமே உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது’ மருத்துவ கலந்தாய்வு நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாணவி கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர விண்ணப்பித்துள்ளார். அவருக்கு தற்போது ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: குடிசைப்பகுதி மாற்று வாரியத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்