புதுக்கோட்டை: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் திருமயம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் விஜயகுமார் சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது,கேட்கப்பட்ட கேள்விகளும் பதிலும்...
கேள்வி:கால அவகாசம் முடிந்த பிறகும் இயக்கப்படும் டோல் கேட்டுகள் எப்போது மூடப்படும்?
பதில்:"டோலின் காலம் முடிந்த பிறகு மெல்ல மெல்ல மராமத்துப் பணிகள் செய்யப்பட்டு, டோல்கேட் தொடரும். தற்போது பரிசோதனையின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம். நேரடியாக வாகனங்களை நிறுத்தாமல் டோலின் மேல் பொருத்தப்பட்ட நவீன கருவியின் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணம் நேரடியாக வசூலிக்கப்படும் படி, வெளிநாடுகளைப் போல் இந்த டோல் சிஸ்டம் செயல்படுத்தப்படும்.
அதற்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இதே வேளையில் தற்போது சிலர் பணம் செலுத்தாமல் டோலில் இருந்து தாவி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அது சரி செய்யப்படும்" என்றார்.
கேள்வி:புதிய டோல் வருமா?
பதில்: "ஒவ்வொரு 60 கி.மீ தொலைவுக்கும் ஒரு டோல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடையில் புதிதாக ஏதேனும் பாலம் கட்டுமானப் பணி வருகின்ற போது, அதன் அருகிலேயே ஒரு டோல்கேட் அமைக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. டோல்கேட்டில் வசூலிக்கப்படும் பணம், பராமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், மராமத்து பணிகளுக்காக சுழற்சி முறையில் செலவிடப்பட்டு வருகிறது"என்றார்.