தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகரும் நியாயவிலைக் கடையைத் தொடங்கிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: நகரும் நியாயவிலைக் கடை மூலம் பொதுமக்களுக்கு அவரவர் இருப்பிடங்களிலேயே பொருள்கள் வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Oct 10, 2020, 4:52 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கூகைப்புலியான்கொல்லையில் கூட்டுறவுத் துறையின் சார்பில், அம்மா நகரும் நியாயவிலைக் கடையினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதன்பின் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்கள்.

அந்த வகையில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளதுடன், மாவட்டம் முழுவதும் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில், இன்றைய தினம் கூகைப்புலியான்கொல்லையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே மழையூர் தாய் அங்காடியில் 1,281 குடும்ப அட்டையிலிருந்து 84 குடும்ப அட்டைகள் தனியாகப் பிரித்து நகரும் நியாயவிலைக் கடை அங்காடியாக செயல்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் சென்று பொருள்கள் பெற்றுவந்த நிலை மாறி தங்களது இருப்பிடங்களிலேயே தங்களுக்குத் தேவையான பொருள்களை இனி பெற முடியும்.

இந்த நகரும் நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, விலையில்லாமலும் 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் மண்ணெண்ணெய், 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள 100 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்களது இருப்பிடங்களிலேயே பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

இப்பகுதி பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களைப் பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details