அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் புதுக்கோட்டை: அரசு கிளை அச்சகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு அரசு சார்பில் மூன்று கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கான இடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சிலையை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற கிளை அச்சகங்களில் அளிக்கப்பட்டது போன்று புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திலும் நவீன வசதிகள் கொண்ட பிரிண்டிங் மெஷின் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை. வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் ஆகியோரிடம் பேசி தமிழை வளர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான ஆலோசனைகளை தமிழ் வளர்ச்சித் துறையும் அவர்களுக்கு அளித்து வருகிறது.
நேற்று சுதந்திர தின உரையில் 55,000 அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும்.
தமிழக அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்று அரசாணையை உள்ளது அந்த அரசாணை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது.
வணிக நிறுவனங்களில் பெயர்கள் தமிழில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் செய்தி மக்கள் தொடர்பு துறையும் இணைந்து விரைவில் ஆய்வு செய்து பெயர் பலகைகள் தமிழில் இடம் படாத கடைகளை கண்டறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை அளித்து வரும் காலங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழக அரசு தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. எது நடந்தாலும் இந்தி திணிப்பை திமுக எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும். நமது தாய்மொழி தான் முக்கியம் என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படைங்க:நிலையற்ற நூல் விலை: பின்னலாடை தொழிலில் பின்னடையும் அபாய நிலையில் தமிழகம்!