புதுக்கோட்டை:தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடக்க விழா மற்றும் தொகை பெறப்போகும் பெண்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தையும், ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ‘இன்று பெண்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான நாள். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை இன்று முதல் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மாதந்தோறும் நடைமுறையில் இருக்கும். பெண்களின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்காகவும், வாழ்க்கைப் பாதையை முன்னேற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்துள்ளது.
அதேபோல், நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மற்றும் தெரிவிக்காத திட்டங்களை செயலாற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் வசைபாடுவார்கள் எனவும், அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நோக்கம் என்பது, மக்கள் நலன் மற்றும் மக்களுக்காக பாடுபடுவது.
இந்தத் திட்டத்தில் பயன் பெறாதவர்கள் மேல் முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்றார்.