புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "வெள்ள பாதிப்பு அதிகளவு இருந்ததாலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டதனாலும், மத்திய அரசு நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இதை நான் தவறாக எண்ணவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே நிவாரணமாகப் பத்தாயிரம் கோடி தேவைப்படும் நிலையில் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அரசியலைக் கடந்து அந்தப்பகுதி மக்கள் சகஜ நிலைக்கு வர வேண்டும் என்று எண்ணி அனைவரும் செயல்பட வேண்டும்.
கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்கு மத்தியில் இருந்து குழுக்களை மட்டும் நியமித்து அனுப்பிவிடும் மத்திய அரசு, சம்பவம் நடந்தபோது மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் வராதது ஏன். மணிப்பூர் பிரச்சனையில் மத்தியில் இருந்து எந்த ஒரு அமைச்சரும் போகாதது ஏன்?
வட மாநிலத்தவர் குறித்து தயாநிதி மாறன் பேச்சு திரித்து கூறப்பட்டது. அதில் உண்மை இல்லை. அவர் எந்த ஒரு தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை. தமிழகத்திலிருந்து செல்பவர்கள் ஆங்கிலம் தெரிவதால் எளிதாக வேலை வாய்ப்பு பெற முடிகிறது. ஆனால் வட மாநிலத்தவர்கள் ஹிந்தியை மட்டும் தெரிந்து இருந்ததால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைத்தான் தயாநிதி மாறன் கூறினார். ஆனால் அவருடைய கருத்தை திரித்து தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக பதிவு செய்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் பிரச்சனை வரவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை வடநாட்டில் அதிக அளவு பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர். தமிழ்நாடு பாஜகவும் இந்த கருத்தைத் திரித்து பிரச்சாரம் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிதீஷ் குமார் ஹிந்தி குறித்துக் கூறிய கருத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் நாகரிகம் கருதியும், கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களும் கூறாமல் அமைதி காத்தனர்.
பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் ராகுல் காந்தியை முன்னிறுத்தவில்லை என்பது உண்மைதான். கூட்டணியைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் தலைவராக உள்ளார். எங்களைப் பொறுத்தவரைப் பிரதமராக யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம். அதுதான் எங்களுடைய இலக்கு. ஒவ்வொரு துறையிலும் நிறையக் கதாநாயகர்கள் இருக்கின்றனர்.
அதேப்போல், இந்தியா கூட்டணியில் கதாநாயகர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் இந்தியாவின் வில்லன் மோடி. அவர் வரக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை முடிவு செய்யவில்லை. எங்களுடைய கட்சி எடுக்கும் முடிவு தான் என்னுடைய முடிவு” எனத் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர்கள் வரும்போது முதலில் மக்களைக் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசைக் குறை கூறுவது தவறு என்று ஆந்திர அமைச்சர் ரோஜா கூறியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த துரை வைகோ, "அது அவருடைய கருத்து. அவரது கேள்விக்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி