உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களில் 214 இடங்களில் 232 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகக் கருதப்படுகின்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தல் பணிக்கு முதல்கட்டமாக 1,600 காவலர்களும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 1,520 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முன்பு நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில்தான் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலை முன்னிட்டு தனி நபர்கள் தற்காப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கிகள் இதுவரை 450 பேர் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.