புதுக்கோட்டை:விராலிமலை ராஐநாயகன்பட்டியைச் சேர்ந்தவர் முருகப்பன் (57). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் முருகப்பனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவ்வழக்கு குறித்த விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சு. சத்யா அமர்வில் நடைபெற்றது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரது உயிர் உள்ளவரை ஆயுள் தண்டனையும், 70ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகை கட்ட தவறினால் 1 வருடம் கடுங்காவல் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.