புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலங்குடி, திருமயம் சட்டப்பேரவை தொகுதி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்படவேண்டும்.
மாவட்டத் தலைமைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். காங்கிரஸில் பலமாற்றங்களை கொண்டு வரவேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகையால் யாருக்கும் பயம் கிடையாது. பாஜக தலைவர் எல். முருகன் அவ்வாறு கூறியிருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸ் அதிக சீட்களை பெற்று தோற்றுவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குறைந்த சீட்தான் கேட்கவேண்டும் என கூறுவது தவறு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தன்மை வேறுபடும். காங்கிரஸ் தனித்து நின்றால் எவ்வளவு வாக்குகள் வாங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஏழு பேர் விடுதலையில் எங்களுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. ஏனென்றால், எங்களுடைய கொள்கை வேறு, அவர்களுடயை கொள்கை வேறு. இதனால், கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க:'திருமாவின் நிலைப்பாட்டை தெரிந்து விமர்சியுங்கள்!'