புதுக்கோட்டை: வெட்டன் விடுதியில் பாஜக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தம் இல்ல திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், "இளைஞர்கள் காரல் மார்க்ஸை படிப்பது குறைவாக உள்ளது, காரல் மார்க்ஸை படிப்பதன் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் 20 ஆண்டுகள் நாட்டில் ஒரே தேர்தல் தான் நடந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் போது பல மாநிலங்களில் 356 பிரிவை பயன்படுத்தி மாநில அரசை கலைத்ததன் விளைவாகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடப்பட்டது.
இதனை மீண்டும் பிரதமர் மோடி கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார். இதுதான் பிரதமர் மோடியின் ஆசை. இப்போது ஒரே ஆண்டில் 7 தேர்தல் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடிக்கடி, தேர்தல் நடைபெறுவதால் அரசு அதிகாரிகளின் வேலை பாதிக்கிறது. அரசு அதிகாரிகள் மக்கள் பணிகளை செய்ய முடியாமல் தேர்தல் வேலைகளை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மூலமாக அரசு அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும். அவர்களுடைய பணியை முறையாக செய்ய முடியும். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் 4 வருடம் கொள்ளை அடிக்கின்றனர், அதன் பின் தேர்தலில் கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்கு கொடுக்கின்றனர்.