எடப்பாடி ஒழிக என அமமுகவினர் முழக்கம்: போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு! புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் பேரணி சென்ற மறுபுற சாலையில், ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமமுகவினர் 'எடப்பாடி பழனிசாமி ஒழிக' என முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பின் நடக்கக்குடிய முதல் மாநாடாக விளங்கும். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், மதுரையில் ‘அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு பகுதியில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.
இது முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், வளர்மதி ஆகியோர் கலந்துகொள்ளும்படி இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று இரவு முதல் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த தனியார் ஹோட்டலில் இருந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை அதிமுக மாநாடு குறித்த லோகோ பொருத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ விளம்பரப் பேரணியை முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த அதிமுக தொண்டர்களின் பேரணியானது, மகளிர் கலைக் கல்லூரி வழியாக மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இது ஒரு புறம் இருக்க, அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அமமுக சார்பில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, எதிர்பார்த்தது போல் அமமுகவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அதிமுகவினர் பேரணி சென்ற மறுபுற சாலையில், அதிமுகவினரை பார்த்து நடைபயணம் சென்றவாறு ''எடப்பாடி பழனிசாமி ஒழிக, துரோகி பழனிசாமி ஒழிக, எடப்பாடி பழனிசாமி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என முழக்கமிட்டபடி, பேரணியாக சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுக்க முற்பட்டும் பேரணி தொடங்கியது. பின்னர் ஒரு வழியாக காவல் துறையினர் அமமுகவினரை அனுப்பி வைத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொண்டனர். இதனையடுத்து இந்தப் பேரணியானது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக சென்றது.
ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாகச் செயல்பட்டு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர, திமுக அரசை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது அமமமுவினர் எடப்பாடி ஒழிக என முழக்கமிட்டதும், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் தாமதம் ஏன்? ஓபிஎஸ் தரப்பினர் கேள்வி