புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம், குன்னூர் ஊராட்சியிலுள்ள முதுவளர்குடி கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிட்டில் புதிதாகப் பயணியர் நிழற்குடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடை கடந்த சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இந்தப் புதிய நிழற்குடையில், சட்டப்பேரவை உறுப்பினர் ரெத்தினசபாபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, நரேந்திரஜோதி, ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் சுப்பு, ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. திமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரான உமாதேவி பெயர் எழுதப்படவில்லை.
ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ள நிலையில், தலைவர் பெயர் ஏன் எழுதப்படவில்லை, தலைவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் எழுதப்படவில்லையா அல்லது பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் பெயர் புறக்கணிப்பு விவகாரத்தை, தீண்டாமையால் ஒன்றியக் குழு தலைவர் பெயர் இடம்பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.